மணிலா: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டதால், இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்ல அஞ்சிய பிலிப்பீன்ஸ் மக்கள் சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் தூங்கினார்கள்.
பிலிப்பீன்சின் அப்ரா மாநிலத்தில் புதன்கிழமையன்று 7 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. அதில் ஐந்து பேர் மாண்டுவிட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் பல சிறிய, உயர்மாடிக் கட்டடங்கள் சேதமடைந்தன. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
"ஒவ்வொரு 20 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டன," என்றார் அப்ரா மாநிலத்தின் உணவக உரிமையாளர் ஒருவர்.
மக்களுக்குத் தேவையான உதவிகளை விரைந்து செய்யவும் மீட்பு, உதவி நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் அந்நாட்டின் அதிபர் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டு உள்ளார்.

