நீதிமன்றத்தின் முன் ராஜபக்சே நேரில் தோன்ற தேவையில்லை

நீதிமன்றத்தின் முன் ராஜபக்சே நேரில் தோன்ற தேவையில்லை

1 mins read
91e73972-7f46-4a5b-a38f-fa0dde97ccb7
படம்: கோத்தபாய ராஜபக்சே/பேஸ்புக் -

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன் தோன்றவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர் கூடியவிரைவில் சிங்கப்பூரிலிருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரு ராஜபக்சே நீதிமன்றத்தின் முன் நேரில் தோன்ற அவசியம் இருக்காது என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மூத்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். அவருடைய வழக்கறிஞர்கள் அவரை நீதிமன்றத்தில் பிரதிநிதிக்கமுடியும் எனத் தெரிகிறது.

நாட்டில் நிலவும் பொருளியல் நெருக்கடிக்கு திரு ராஜபக்சே உட்பட 13 அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரு ராஜபக்சேவை விசாரிக்க அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இலங்கையிலிருந்து மாலத் தீவுக்குத் சென்ற திரு ராஜபக்சே, அங்கிருந்து சிங்கப்பூருக்கு ஜூலை 14ஆம் தேதியன்று வந்தார். சிங்கப்பூர் அவருக்கு குறுகியகால குடிநுைழைவு அனுமதியை அளித்தது. அவருடைய விசா மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருக்கலாம்.