லாட்வியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷ்யா
மாஸ்கோ: உக்ரேன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், லாட்வியாவுக்கு எரிவாயு விநியோகம் செய்வதை ரஷ்ய எரிவாயு நிறுவனம் கேஸ்பிரோம் நிறுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பல தடைகளை விதித்துள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடற்கரைகள் திறப்பு; நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை
மக்காவ்: கொவிட்-19 கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வரும் மக்காவ், கடற்கரைகளைப் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்துவிட்டுள்ளது.
ஆனால் நீச்சல் குளங்களுக்குச் செல்லவும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க கடற்கரைக்குச் சென்று குளிர் காற்றை அனுபவிக்கலாம் என்றும் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் மக்காவ் அதிகாரிகள் கூறினர். ஆனால் நீச்சல், நீர் விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை என்று அவர்கள் கூறினர்.
கொடிகளை படுக்கை விரிப்பு, உடுப்பாகக் பயன்படுத்தியவர் கைது
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அண்மையில் உச்சக்கட்டத்தை எட்டி ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அங்கிருந்த இரண்டு கொடிகளை தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்தது. அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்தக் கொடிகளை படுக்கை விரிப்பாகவும் கைலியாகவும் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தும் நாள்களைக் குறைக்க திட்டமிடும் ஹாங்காங்
ஹாங்காங்: வெளிநாடுகளிலிருந்து ஹாங்காங்கிற்குச் செல்லும் பயணிகள் தற்போது ஏழு நாள்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதை ஐந்து நாள்களாகக் குறைக்க இருப்பதாக ஹாங்காங்கின் சுகாதாரத் துறை தலைவர் லோ சுன் மாவ் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

