ஆற்றில் குடும்பத்தினருடன் சேர்ந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி முதலை இழுத்துச் சென்ற சம்பவம் மலேசியாவின் கினபாத்தாங்கான் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
சனிக்கிழமை (30 ஜூலை) பிற்பகல் மூன்று மணியளவில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 32 வயது நோர்சிலா சாயோங் என்னும் அப்பெண்ணின் உடலை ஏழு மணியளவில் கிராமவாசிகள் கண்டனர்.
கடைசியாக அவர் காணப்பட்ட இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கள் கண்ணெதிரே நோர்சிலாவை அந்தப் பெரிய முதலைக் கவ்விச்சென்றபோதும் அவரின் குடும்பத்தினரால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
நோர்சிலாவைப் பிடித்து இழுத்து முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க அவரின் குடும்பத்தினர் முயன்றனர்.
ஆனால், அளவிலும் வலிமையிலும் முதலை பெரிதாக இருந்ததால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
அந்த முதலையின் தலை மட்டும் ஒரு சிறிய படகு அளவிற்கு இருக்கும் என்று உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டனர்.
கடந்த சில காலமாகவே அந்த முதலையைத் தாங்கள் கண்டுள்ளதாகப் பலர் கூறினர்.
இந்நிலையில், முதலையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளதாக அறியப்படுகிறது என்று 'தி ஸ்டார்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

