பெய்ஜிங்: சீனாவில் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துவரும் நிலையில், அந்நாட்டு இளையர்கள் வேலை தேடிக்கொள்ள பெரிதும் சிரமப்படுகின்றனர்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 16 முதல் 24 வயதிற்குட்பட்ட சீன இளையர்களில் ஐவரில் ஒருவர் வேலையின்றி இருந்ததாக அந்நாட்டு அரசாங்கத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்ற அக்டோபர் மாதத்தில் இருந்தே அங்கு நகர்ப்புற இளையர் வேலையின்மை விகிதம் மெல்ல அதிகரித்து வருகிறது. அப்போது 14.2 விழுக்காடாக இருந்த இளையர் வேலையின்மை விகிதம், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் 19.3% என்று இதற்குமுன் இல்லாத வகையில் உயர்ந்துவிட்டது.
புதிதாக 10.76 மில்லியன் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் புதிதாக வேலைச் சந்தையில் நுழைவதால் நிலைமை மேலும் மோசமாகலாம் எனச் சொல்லப்படுகிறது.
இவ்வாண்டின் 2ஆம் காலாண்டில் ஒவ்வொரு பட்டதாரிக்கும் 0.53 வேலையே இருந்தது என்று 'ஸாவ்பின்' எனும் சீன ஆட்சேர்ப்பு இணையத்தள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சுற்றுப்பயணம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஆட்சேர்ப்பு மிகவும் சுருங்கிவிட்டது.
கொவிட்-19 பரவல் காரணமாக அவ்வப்போது அறிவிக்கப்படும் முடக்கநிலைகளால் தொழில்கள் தள்ளாட்டம் காண, இவ்வாண்டின் 2ஆம் காலாண்டில் சீனப் பொருளியல் 0.4% மட்டுமே வளர்ச்சி கண்டது.
இவ்வாண்டில் சீனப் பொருளியல் கிட்டத்தட்ட 5.5% வளர்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்கும் கொள்கை நீடித்தால் அவ்வளர்ச்சி சாத்தியமன்று என்றும் சொல்லப்படுகிறது.

