சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்
பர்மிங்ஹம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு முதல் பதக்கம் கிட்டியது. ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் 24 வயது டியோங் ஸென் வெய் வெள்ளிப் பதக்கம் வென்றார். 23.21 நொடிகளில் அவர் பந்தயத்தை முடித்தார். இங்கிலாந்து வீரர் பென் பிரௌட் தங்கமும் நியூசிலாந்து வீரர் கேமரன் கிரே வெண்கலமும் வென்றனர்.
பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா
பர்மிங்ஹம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மழையால் போட்டி 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பந்தடித்த இந்திய அணி 11.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டி வெற்றிபெற்றது. மொத்தம் எட்டு அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இடம்பெற்று உள்ள இந்தியா, முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. வரும் 4ஆம் தேதி நடக்கவுள்ள அடுத்த ஆட்டத்தில் இந்தியா, பார்பேடோசுடன் மோதவிருக்கிறது.
மேன்சிட்டியை வீழ்த்திய லிவர்பூல்
லெஸ்டர்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, சமூகக் கேடயத்தைக் கைப்பற்றியது லிவர்பூல் குழு. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஆர்னல்ட், முகம்மது சாலா, டார்வின் நூன்யெஸ் ஆகியோர் லிவர்பூல் சார்பில் கோல் அடித்தனர். மேன்சிட்டி சார்பில் விழுந்த ஒற்றை கோலை அடித்தவர் அக்குழுவின் புதுவரவான ஜூலியன் அல்வாரெஸ்.

