வாஷிங்டன்: அல்-காய்தா தீவிரவாத தலைவர் ஸவஹிரி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறை அல்லது தாக்குதல் மேற்கொள்ளப்படக்கூடும் என்கிறது அமெரிக்கா. எனவே, தமது குடிமக்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கா உலகளாவிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
"அல்-காய்தா ஆதரவாளர்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு தீவிரவாத குழுக்கள் அமெரிக்க கட்டடங்கள் அல்லது ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்தக்கூடும்.
"உலகமெங்கும் உள்ள அமெரிக்கக் கட்டமைப்புகள்மீது பயங்கர வாத தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றன.
"தற்கொலைத் தாக்குதல்கள், படுகொலைகள், ஆள்கடத்தல்கள், குண்டுவெடிப்புகள் போன்ற பல்வேறு வகையான திட்டங்கள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும்," என்று அமெரிக்க உள்துறை அமைச்சு கூறுகிறது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் முக்கியமானவரான 71 வயது ஸவஹிரி, சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், அமெரிக்கப் படைகள் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கொல்லப்பட்டார்.

