புத்ராஜெயா: வெளிநாட்டினரைத் திருமணம் செய்துகொண்ட மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு இயல்பாகவே மலேசியக் குடியுரிமை கிடைக்காது என்று மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால், மலேசிய ஆண்களுக்கு இது பொருந்தாது. அவர்களது பிள்ளைகளுக்கு இயல்பாகவோ மலேசியக் குடியுரிமை கிடைத்துவிடும்.
எனவே, இது பாரபட்சமான குடியுரிமை விதி என்று மலேசியத் தாய்மார்கள் சிலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குழந்தைகளை ஈன்றெடுத்த ஆறு மலேசிய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு இயல்பாக மலேசிய குடியுரிமைத் தகுதி கிடைக்க வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அதில் தாய்மார்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், மலேசிய அரசாங்கம் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவில், இருவர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கு இயல்பாகவே குடியுரிமை கிடைக்காது என்று உத்தரவிடப்பட்டது.
மலேசியப் பெண்கள் வெளிநாட்டில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கு மலேசிய குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம். ஆனால், மிகவும் குறைவானவர்களுக்கே குடியுரிமை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
2013 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் குடி உரிமை வேண்டி வந்த 4,000 விண்ணப்பங்களில், 142 மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாக அரசு சாரா நிறுவனம் ஒன்று கூறியது.