ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோ அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஏற்கெனவே கடந்த இரண்டு அதிபர் தேர்தல்களில் தோல்வியடைந்த பிரபோவோ 2024ஆம் ஆண்டு மீண்டும் களமிறங்கவுள்ளார்.
இந்தோனீசியாவின் ஆகப் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான கெரிந்திராவின் தலைவரான பிரபோவோ, அதிபர் தேர்தலில் மறுபடியும் போட்டியிடப்போவதாக நேற்று முன்தினம் கட்சிக் கூட்டம் நிறைவடைந்த பிறகு அறிவித்திருந்தார். கடந்த இரு தேர்தல்களிலும் அவர் தற்போதைய அதிபர் ஜோக்கோவி என்றழைக்கப்படும் ஜோக்கோ விடோடோவிடம் தோல்வியடைந்தார். இரண்டு தவணை காலம் அதிபராக இருப்பதால் ஜோக்கோவியால் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிமுடியாது.
திரு பிரபோவோதான் அடுத்த தேர்தலை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கடந்த ஜூன் மாதம் இந்தோனீசியாவின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான கொம்பஸ் நடத்திய கருத்தாய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 25.3 விழுக்காடு ஆதரவுடன் அவர் முன்னணியில் இருப்பதாக அந்தக் கருத்தாய்வில் தெரியவந்தது.
அவருக்கு அடுத்த நிலையில் 22 விழுக்காட்டுடன் மத்திய ஜாவாவின் தற்போதைய ஆளுநரான திரு கஞ்சர் பிரனோவோ இருக்கிறார். 12.6 விழுக்காட்டு ஆதரவுடன் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநர் அனீஸ் பாஸ்வெடன் இருக்கிறார்.
இதற்கிடையே, திரு பிரபோவோவின் கெரிந்திராவும் இந்தோனீசியாவின் ஆகப் பெரிய இஸ்லாமிய கட்சியான 'பிகேபி' என்றழைக்கப்படும் தேசிய விழிப்புக் கட்சியும் கூட்டணி வைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன. 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக அமைந்துள்ள இரண்டாவது கூட்டணி இது.
இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் தற்போது கெரிந்திராவிற்கு 78 இடங்கள் உள்ளன. தேசிய விழிப்புக் கட்சிக்கு 58 இடங்கள் இருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் இணையும்போது அடுத்த அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபந்தனை பூர்த்திசெய்யப்படும்.

