மாஸ்கோ: உக்ரேனுடனான போரின் விளைவாக ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளியல் தடைகள் காரணமாக, அந்நாட்டின் பொருளியல் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் சுருங்கியது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவின் பொருளியல் கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க நான்கு விழுக்காடு சரிந்ததென அதன் புள்ளிவிவரத் துறை நேற்று முன்தினம் தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்குப் பிறகு கணக்கிடப்பட்ட காலாண்டு அறிக்கையில் இந்த பொருளியல் சரிவு தென்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் காலாண்டில் ரஷ்யாவின் பொருளியல் 3.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
மேற்கத்திய நாடுகளின் பல்வேறு பொருளியல் தடைகளால் வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க இருப்பு ஆகியவற்றின் தேக்கத்தில் ரஷ்யா அது பெற்று வந்த 600 பில்லியன் அமெரிக்க டாலர் (823 பில்லியன் வெள்ளி) வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை இழக்க நேரிட்டது.
ரஷ்ய வங்கிகளுடன் மேற்கத்திய நாடுகள் தங்கள் பரிவர்த்தனைகளை முறித்துக்கொண்டதாலும் பல பெரிய நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதாலும் இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இறக்குமதிகள் நிறுத்தப்பட்டு, நிதிப் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டிருந்தாலும், சில பொருளியல் நிபுணர்களின் கணிப்புக்கு மாறாக, அதன் பொருளியல் இன்னும் அதிகம் தாக்குபிடித்துள்ளது.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட பொருளியல் சரிவு எதிர்பார்த்த அளவு மோசமாக இல்லை என்று கருத்துரைத்த பொருளியல் நிபுணர்கள், உலகளவில் எரிசக்தி விலை பலமடங்கு உயர்ந்திருக்கும் வேளையில், ரஷ்யா தனது எரிசக்தி வருமானத்தைக் கொண்டு பொருளியல் சரிவை சற்று ஈடுகட்ட முடிந்துள்ளது என்று கூறினர். ஆனால், இந்த நிலைமை அதிக காலத்துக்கு நிலைக்காது என்று கூறும் பொருளியல் பகுப்பாய்வாளர்கள், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயுவை அதிக அளவில் புறக்கணிக்கும்போது அதன் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என்றனர்.
"இவ்வாண்டு ரஷ்யாவின் பொருளியல் சரிவு மோசமாக இருக்கும்," என்றார் ஃபின்லாந்து வங்கியின் பொருளியல் உருமாற்றக் கழக மூத்த ஆலோசகர் லோரா சொலான்கோ.

