ஜெருசலம்: ஜெருசலத்தில் பேருந்து ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒரு கர்ப்பிணி உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் அமெரிக்க குடிமக்களும் அடங்குவர்.
உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பின்னிரவில் நிகழ்ந்த தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை இஸ்ரேலிய காவல்துறை கைதுசெய்தது. சந்தேக நபர் தானே சரணடைந்ததாக காவல்துறை சொன்னது. யூதர்கள் பிரார்த்தனைக்கு ஒன்றுகூடும் 'வெஸ்டர்ன் ஹால்' பகுதிக்கு அருகே தாக்குதல் நிகழ்ந்தது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து ஒன்றின் மீதும் சாலையில் மக்களை நோக்கியும் துப்பாக்கி ஏந்திய ஒருவர் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க குடிமக்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து தாங்கள் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் ஆளாகியிருப்பதாக அந்நாட்டின் தூதரகம் கூறியது. காயமடைந்தோரின் அடையாளம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தாக்குதல்காரர் ெஜருசலத்தைச் சேர்ந்த குற்றப் பின்னணி இருப்பவர் என்று இஸ்ரேலிய பிரதமர் யாயர் லப்பிட் நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

