93 வயதில் விமானத்தின் மேலே 'பறந்து' சாகசம் புரிந்த 'பெட்டி' பாட்டி (காணொளி)

93 வயதில் விமானத்தின் மேலே 'பறந்து' சாகசம் புரிந்த 'பெட்டி' பாட்டி (காணொளி)

2 mins read
507e03bc-c6f9-45c2-a307-78146ae31eec
படம்: ஏரோசுப்பர்பேட்டிக்ஸ் ஃபேஸ்புக் -

இங்கிலாந்தில் வசிக்கும் 93 வயது மூதாட்டி ஒருவருக்கு வானில் பறக்க வேண்டும் எனும் ஒரு விநோதமான ஆசை. பொதுவாக வான்குடையில் 'பறப்பார்கள்' அல்லது விமானத்தில் 'பறப்பார்கள்'.

ஆனால் இந்த பாட்டியோ விமனாத்திற்கு மேலே நின்று கொண்டு பறந்துள்ளார். ஒரு முறை இரு முறை அல்ல..ஐந்து முறை!

பெட்டி என்னும் அந்த மூதாட்டி புரிந்துள்ள இந்த வியக்க வைக்கும் சாகசம், வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கிறது.

விமானத்தின் இறக்கைகள் நின்றுகொண்டு நகர்வதற்கு பெயர்தான் 'விங் வாக்கிங்' (wing walking). அந்த சாகசத்தை தான் பெட்டி புரிந்துள்ளார்.

பிபிசி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளியில் விமானம் புறப்பட்டபோது பெட்டி தன் கைகளை அசைப்பதை காணலாம். விமான சுழன்றபோது அவர் அமைதியாக அங்கு நிற்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது.

விமானம் மேலே சென்றதும் சற்று திடுக்கிட்டாலும் இந்த அனுபவம் தமக்கு புதுமையாக இருந்ததாகவும் புத்துணர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

"என்னால் பல விஷயங்கள் செய்ய முடியாது, ஆனால் இது புதிது, இதுவரை செய்யாததை செய்து பார்க்க வேண்டும்" என்றார்.

விமானி பெட்டியின் தைரியத்தைக் கண்டு வியந்தார். விமானம் 1 மணி நேரத்திற்கு 130 மைல் வேகத்தில் பறந்த போதிலும் பெட்டி தெரியமாக பயணத்தை ரசித்துக்கொண்டு இருந்ததை விமானி கண்டார். பெட்டியை விட தனக்கு தான் பயம் அதிகமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

இண்டிபெண்டெண்ட் செய்தித்தாள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, உடல்நோவு தணிக்கும் கவனிப்பு அறநிறுவனதிற்கு (palliative care charity) நிதி திரட்ட பெட்டி இந்த சாகசத்தில் கலந்துக்கொண்டதாக கூறினார்.

தொலைக்காட்சியில் பார்த்த ஒரு சாக்லேட் விளம்பரம் அவருக்கு இவ்வாறு தன்னை விமானத்தின் இறக்கைகள் கட்டிக்கொண்டு பறக்க ஊக்கம் கொடுத்ததாக அவர் கூறினார். இதயத்தில் 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டு கழுத்தில் கீல்வாதம் இருந்தும் பெட்டி தமது 87 வயதிலிருந்து சகசம் புரிந்து நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்.