அதிபர் ஜோக்கோவியின் 77வது சுதந்திர தின உரை
ஜகார்த்தா: உலக அரங்கில் இந்தோனீசியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதாக அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ சொன்னார்.
மேலும் தென்கிழக்காசிய நாடுகள், உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே, அமைதிப் பாலமாக இருக்கவேண்டும் என்று இந்தோனீசியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
"இவ்வாண்டு ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பிற்குத் தலைமை ஏற்று உள்ளோம். அடுத்த ஆண்டு ஆசியான் கூட்டமைப்பிற்கு தலைமை ஏற்கக்கூடும்.
"இது, உலகளாவிய தலைமைத்துவத்தில் நாம் சிறப்பாக செயல்படுவதைக் காட்டுகிறது," என்றார் அவர்.
ஜி-20 கூட்டமைப்பின் தலைவராக, வெளியுறவு விவகாரங்களில், அதிபர் ஜோக்கோவி முக்கிய பங்கு வகித்தார்.
அனைத்துலக அளவில் நிலவும் உணவு நெருக்கடிக்கு அமைதித் தீர்வு காணும் வகையில், சென்ற ஜூன் மாதம் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியையும் ரஷ்ய அதிபர் புட்டினையும் அந்தந்த நாடுகளுக்குச் சென்று சந்தித்தார் ஜோக்கோவி.
இருநாடுகளுக்கும் இடையிலான 'அரசதந்திர பாலமாக' இந்தோனீசியா ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டினார்.
உலகப் பொருளியல் நிலையற்றதாக இருக்கும் நிலையில், இந்தோனீசியாவின் பொருளியல் அடிப்படைகள் வலுவாக இருப்பதாக சொன்ன அவர், இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 4.9 விழுக்காடாகவும் பொருளியல் வளர்ச்சி 5.4 விழுக்காடாகவும் உள்ளது எனவும் கூறினார். ஆசியான் உறுப்பு நாடுகள் சிலவற்றின் பணவீக்கம் 7 விழுக்காடாக உள்ளது.
கிருமிப் பரவல் குறைந்துள்ள நிலையில், பொருளியல் வளர்ச்சி, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஜோக்கோவி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தோனீசியா உள்ளது. அங்கு இதுவரை 432 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

