இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பின் உரிமம் ரத்து

இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பின் உரிமம் ரத்து

2 mins read
945bb90a-862a-4d25-848e-5ccdf06b4e99
-

அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான காற்பந்து உலகக் கிண்ணப் போட்டியை, திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்த முடியாது.

புதுடெல்லி: இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பின் உரிமத்தை அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் ரத்து செய்துள்ளது.

இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பில் தேர்தல் நடைபெறாமல் இருப்பதாகவும் பதவிக் காலம் முடிந்த பின்னரும் தலைமை பொறுப்பில் பிரஃபுல் பட்டேல் தொடர்கிறார் எனவும் இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பு நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூட்டமைப்பை நிர்வகிக்க குழு அமைத்து உத்தரவிட்டது.

எனவே, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் இந்த நிலை தொடர்ந்தால் வெளியாட்களின் தலையீடு எனக் கூறி உரிமம் ரத்து செய்யபடும் எனவும் ஃபிஃபா ஏற்கெனவே எச்சரித்து இருந்தது.

இருப்பினும், தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது ஃபிஃபா.

இந்த இடைநீக்கத்தால் நடப்பாண்டில் அக்டோபர் 11 முதல் 30ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான காற்பந்து உலகக் கிண்ணப் போட்டியை, திட்டமிட்டபடி தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இப்போட்டியை இடமாற்றம் செய்யவோ அல்லது இதுகுறித்த மாற்று நடவடிக்கை பற்றியோ ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனவும் அது சொன்னது.

முறையாக தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் வந்த பின் இந்த தடை விலக்கிக்கொள்ளப்படும் எனவும் ஃபிஃபா சொன்னது.

இருந்தாலும் இந்திய மகளிர் காற்பந்துத் தொடரில் வெற்றி பெற்று, ஆசிய மகளிர் காற்பந்துக் கிண்ணத் தொடருக்காக நேற்று உஸ்பெகிஸ்தான் புறப்பட்ட கோகுலம் கேரளா அணியும் தற்போது அந்தத் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.