கோலாலம்பூர்: மலேசியக் கடற்படைக்கு போர்க்கப்பல்கள் வாங்குவது தொடர்பான எல்சிஎஸ் ஒப்பந்த விவகாரத்தில், மலேசிய முன்னாள் கடற்படைத் தலைவர் அகமது ரம்லி முகமதுமீது மூன்று குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அகமது ரம்லி விசாரணை கோரினார்.
அகமது ரம்லி, 78, 2005 முதல் 2019ஆம் ஆண்டு வரை, பௌஸ்டெட் நேவல் ஷிப்யார்ட் என்ற நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆவார்.
அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் உடன்பாடு இல்லாமல், சிங்கப்பூரை அடிப்படையாக கொண்ட மூன்று நிறுவனங்களுக்கு 21.08 மில்லியன் ரிங்கிட் (6.5 மில்லியன் வெள்ளி) செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்ததாக அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
செட்டாரியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 13.5 மில்லியன் ரிங்கிட்டும் ஜேஎஸ்டி கார்ப் நிறுவனத்திற்கு 1.36 மில்லியன் ரிங்கிட்டும் சோஸ்மரின் அர்மடா நிறுவனத்திற்கு 6.18 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கிய மூன்று குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பௌஸ்ட்டெட் நிறுவனத்திற்கும் எந்தவொரு வர்த்தக தொடர்பும் இல்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தகவல் ஒன்று கூறுகிறது.
இவை அனைத்தும் 2010 ஜூலை மாதத்திற்கும் 2011 மே மாதத்திற்கும் இடையில் நடந்தவையாகும். இந்த வழக்கு நவம்பர் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

