தென் தாய்லாந்தில் புதன்கிழமையன்று (17 ஆகஸ்ட்) குறைந்தது 17 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, தீச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதல்களில் எழுவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை (16 ஆகஸ்ட்) பின்னிரவுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் சில குண்டு வெடிப்புத் தாக்குதல்கள், சில தீயை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்.
மூன்று மாநிலங்களில் உள்ள அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், ஒரு பெட்ரோல் நிலையம் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் காவல்துறையும் ராணுவமும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது.
தாக்குதல்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
மலேசியாவுக்கு அருகே உள்ள தாய்லாந்தின் தெற்குப் பகுதிகள் சிலவற்றில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.

