பெய்ஜிங்: வறுத்தெடுக்கும் கடுமையான வெயில், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சி ஆகியவற்றின் காரணமாக சீனாவில் மின்பற்றாக்குறைத் தலைதூக்கியுள்ளது.
எனவே, தென்மேற்கு சின்சுவான் மாநிலத்தில் வீடுகள், கடைத்தொகுதிகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கான மின்விநியோகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதன்கிழமையன்று டாஷோ பகுதியில் சுழற்சி முறையில் பல மணி நேரத்திற்கு மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அரசு அலுவலகங்களில் குளிரூட்டியை 26 டிகிரி செல்சியசிற்குக் கீழ் குறைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ஊழியர்கள், மின்தூக்கிகளுக்குப் பதிலாக பெரும்பாலும் மாடிப்படிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் நீருற்றுகள், ஒளிக் காட்சிகள் உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான அனல்காற்றை சீனா எதிர்கொண்டிருக்கும் நிலையில், லித்தியம், உரம், உலோக நிறுவனங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜின்ஜியாங், ஜியங்சு, அன்ஹுய் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளுக்கு மின்விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், தொழிற்சாலைகளுக்கான மின்விநியோகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதே நிலை நீடித்தால், இம்மாநிலங்களிலும் வீடுகளுக்கான மின்விநியோகத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டுவர நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் அனல்காற்று, மனிதர்களை மட்டுமல்லாது, கால்நடைகளையும் பாதித்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக கோழிகள் முட்டையிடுவது குறைந்துவிட்டதாக ஹெஃபி பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். சிலர் கோழிகளுக்கு குளிரூட்டி வசதி செய்துள்ளனர்.
இதனால், அங்கு முட்டை விலை கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகரித்து உள்ளது.

