வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசியின் தைவான் பயணம் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்த விவகாரத்தில் சீனாவை அமெரிக்க குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்றும் வாஷிங்டனுக்கான சீனத் தூதர் குவின் காங் சொன்னார்.
தைவான் பயணம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு தன்னிச்சையானது என்று அமெரிக்க அதிகாரிகளின் கூற்றை அவர் நிராகரித்தார்.
பெலோசி உள்ளிட்டோரின் பயணம் ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்ட அமெரிக்கா-சீனா ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் என்றும் அவர் சொன்னார்.
போதாததற்குச் சென்ற வாரயிறுதியில், மாசசூசெட்ஸின் ஜனநாயகக் கட்சி செனட்டர் எட்வர்ட் மார்கி தலைமையிலான குழு தைவானுக்குப் பயணம் மேற்கொண்டது சீனாவை மேலும் கோபமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் பேசிய காங், "பதற்றத்தை அதிகரிக்கும் எந்தச் செயலையும் தவிர்க்குமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கிறேன். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்தச் செயலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும்,
"ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதிப்பாட்டையும் திறனையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்," என்றார் அவர்.
அத்துடன், தைவான் நீரிணை வழியாகச் செல்வதை அமெரிக்கக் கப்பல்கள் தவிர்க்க வேண்டுமென்றும் சீனா கூறியுள்ளது.
அமெரிக்கக் கப்பல்கள் அந்த வழியாகச் சென்றால், அதை தைவானின் பிரிவினைவாத அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சியாக சீனா கருதும் என்று காங் சொன்னார்.

