கொழும்பு: இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின்போது மீண்டும் தமிழிலும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது தமிழிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற யோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தார்.
இதற்கு முன்பும், சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுனார்.
அந்த யோசனையை அமைச்சர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இலங்கையில் சிங்களம், தமிழ் என இரண்டும் அதிகாரபூர்வ மொழியாக உள்ள நிலையில், அந்த மொழிகளில் தேசிய கீதத்தைப் பாடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

