வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
புதுடெல்லி: இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பு தொடர்பான வழக்குகளின் விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்புக்கான தேர்தல் நடத்தப்படாததைத் தொடர்ந்து, அதன் அங்கீகாரத்தை ஃபிஃபா தற்காலிகமாக ரத்து செய்தது.
'யுனைடெட் குழுவை வாங்கவில்லை'
லண்டன்: பிரபல மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவை வாங்கப் போவதாக தாம் கூறியது விளையாட்டுத்தனமானது என்று உலகக் கோடீஸ்வரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவை வாங்கப் போகிறேன்," என்று மஸ்க் முதலில் டுவிட் செய்திருந்தார்.
அதைப் பார்த்த பயனர் ஒருவர், மஸ்க்கிடம் உண்மையாகவே யுனைடெட் குழுவை வாங்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு, தாம் எந்தவொரு விளையாட்டுக் குழுவையும் வாங்கவில்லை என்று அவர் பதிலளித்திருந்தார்.
யுனைடெட் குழுவின் சரிவால் அதிருப்தி அடைந்த அதன் ரசிகர்கள், அக்குழுவை வாங்குவது குறித்து பரிசீலிக்குமாறு டுவிட்டரில் மஸ்க்கிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவசர சேவையை அழைத்த குரங்கு
லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் குரங்கு ஒன்று அவசர சேவைக்கான 911 தொலைபேசி எண்ணிற்கு அழைத்திருக்கிறது. சனிக்கிழமை இரவு வந்த அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், ஏதாவது அவசரத் தேவையாக இருக்குமோ என்று கருதிய அதிகாரிகள் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தனர்.
உடனடியாக லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'ஸூ டு யூ' விலங்குத் தோட்டத்திற்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். அங்கு சென்று பார்த்தால் மனிதர்கள் யாருக்கும் பிரச்சினை ஏதும் இல்லை.
சற்று ஆராய்ந்து பார்த்த பிறகு ஒரு குரங்குதான் இதற்குக் காரணம் என்பது தெரியவந்தது.
விலங்குத் தோட்டத்தின் கோல்ஃப் வண்டியில் விடப்பட்டிருந்த கைப்பேசியைக் குரங்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
பூப்பந்து: இந்தியர்கள் முதலிடம்
புதுடெல்லி: பூப்பந்துக்கான உலக ஜூனியர் தரவரிசையில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது சங்கர் முத்துசாமியும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தஸ்னிம் மிர்ரும் முதலிடத்தைப் பிடித்தனர்.

