காபூல்: ஆஃப்கானிஸ்தான் பள்ளிவாசலில் எற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளர். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
அண்மைய காலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற பள்ளிவாசலில் நேற்று ஏராளமானோர் (ஆகஸ்ட் 17) வழக்கமான தொழுகைக்காகக் குவிந்தனர்.
அப்போது பள்ளிவாசலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் குறைந்தது 21 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து ஆஃப்கன் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

