வாஷிங்டன்: அமெரிக்காவும் தைவானும் பொருளியல் உறவை ஆழப் படுத்தும் இரு தரப்பு வர்த்தக முயற்சிகளுக்கான பேச்சை முறையாக தொடங்கியுள்ளன.
இது, சீனாவை மேலும் ஆத்திர மூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சுற்றுப் பேச்சு விரைவில் தொடங்கும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதித்துவ அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது. நியாயமான, வளமான 21ஆம் நூற்றாண்டின் பொருளியலுக்கு உதவ 11 வர்த்தக துறைகளை உள்ளடக்கி பேச்சு இருக்கும் என்று அமெரிக்க துணை வர்த்தகப் பிரதிநிதி சாரா பியான்சி தெரிவித்தார்.
வேளாண்மை, மின்னிலக்கத் துறை, சுற்றுச் சூழல், சிறிய-நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக உறவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்படும்.
அமெரிக்க-தைவான் வர்த்தகப் பேச்சை தைவானில் உள்ள அமெரிக்க அமைப்பு முன்னெடுத்துள்ளது. இது, அமெரிக்காவின் அதிகாரபூர்வமற்ற தூதரகமாகவும் செயல்படுகிறது.
"அமெரிக்காவும் தைவானும் முதலீடு, வர்த்தக உறவுகளை மேம் படுத்த விரும்புகின்றன. இருதரப்பு பரஸ்பர முன்னுரிமைகளின் அடிப் படையில் வர்த்தகப் பேச்சு நடை பெறும்," என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதித்துவ அலுவலகம் மேலும் தெரிவித்தது.
கடந்த மே மாதம் இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கிவைத்த சில வாரங்களில் அமெரிக்க-தைவான் வர்த்தக முயற்சி பற்றி அறிவிக்கப்பட்டது.
அப்போதிலிருந்து பெய்ஜிங் உடனான வாஷிங்டனின் உறவு மோசமடைய ஆரம்பித்தது.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனாவுக்கு அமெரிக்காவின் தலையீடு தலை வலியை ஏற்படுத்தி இருக்கிறது.
இம்மாதம் அமெரிக்க மக்களவை நாயகர் நேன்சி பெலோசி சீனாவின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி தைவானுக்கு வருகையளித்தார்.
இதனால் கொதிப்படைந்த சீனா, தைவானைச் சுற்றி போர்ப் பயிற்சி களை நடத்தியது.
தைவான் வான்வெளியில் போர் விமானங்களை ஊடுருவச் செய்து மிரட்டியது.
தைவானும் அதற்கு பதில் நடவடிக்கைகளை எடுத்தது.

