பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 பரவல் கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவிற்குச் சென்ற வாரம் மோசமாக இருந்தது. விடுமுறைக்காலத்தைக் கழிக்க முக்கியச் சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிக அளவில் கூடியதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அங்கு புதிதாக 2,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய நாளில் பதிவான 3,424 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இது குறைவுதான். இருந்தாலும், இம்மாதம் 18ஆம் தேதி வரையிலான கடந்த ஏழு நாள்களில் அங்கு 18,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டனர்.
இதனால் அங்கு கொரோனா பரவல் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், அங்கு மீன், நண்டு போன்ற கடலுணவுகளும் கோழி, நாய் போன்ற விலங்குகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதைச் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள் காட்டின. அங்கு மீனுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுவது இது முதல்முறையன்று என்றும் கூறப்பட்டது.
கடலோரப் பகுதியான ஹைனானில் இம்மாதத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோரை கொவிட்-19 தொற்றிவிட்டது. இந்தத் தொற்று அலைக்கு மீனவச் சமூகத்துடன் தொடர்பிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

