இந்தோனீசியாவில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குரங்கம்மை தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியிருக்கும் பெயர் தெரிவிக்கப்படாத நாட்டிலிருந்து திரும்பிய 27 வயது ஆடவர் ஒருவர் கிருமித்தொற்றுக்கு ஆளானது உறுதியானதாக இந்தோனீசிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
வீட்டில் தனிமையில் இருக்கும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் மோசாக நோய்வாய்ப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, டென்மார்க்கில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்குக் குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது.
இது ஓர் அரிய நிகழ்வு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக்கே குறிப்பிட்டார்.
உலகளவில் பொதுவாக ஓரினக் காதலர்களான ஆண்களுக்கிடையேதான் குரங்கம்மை அதிகம் பரவி வந்துள்ளது.
குரங்கம்மை தொற்றுக்கு ஆளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்படும்போதுதான் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

