மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் நண்பரான அலெக்சாண்டர் டுக்கினின் மகள் கார் வெடிகுண்டுத் தாக்குதலில் மாண்டார்.
டார்யா டுக்கினா ஓட்டிச் சென்ற கார் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டர் தூரம் இருந்தபோது வெடித்துச் சிதறியது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் ரஷ்ய நேரப்படி நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்தது.
டுக்கினாவுக்கு 30 வயது என ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்தது.
வெடித்துச் சிதறிய கார் டுக்கினாவின் தந்தைக்குச் சொந்தமானது என அறியப்படுகிறது.
தந்தைக்கு வைக்கப்பட்ட குறி மகளின் உயிரைப் பறித்திருப்பதாக நம்பப்படுகிறது.
மாஸ்கோவுக்கு வெளியே விழா ஒன்றில் தந்தையும் மகளும் கலந்து கொண்டதாகவும் கடைசி நேரத்தில் கார்களை அவர்கள் மாற்றிக்கொண்டதாகவும் ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான நாளிதழ் தெரிவித்தது.
விசாரணைக்காக சம்பவ இடத்திலிருந்து சிதறிக்கிடந்த பாகங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதை ரஷ்ய தொலைக்காட்சி
காட்டியது.
மரணமடைந்த டுக்கினா செய்தியாளராகவும் அரசியல் நிபுணராகவும் பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொலை வழக்கைப் பதிவு செய்துள்ள ரஷ்ய அதிகாரிகள், தடயவியல் சோதனை செய்யப்பட்டு உண்மையில் என்ன நடந்தது என்பது கண்டறியப்படும் என்று கூறினர். ரஷ்ய மொழி பேசுபவர்கள் இருக்கும் பகுதிகள் அனைத்தையும் இணைத்து புதிய, வலுவான ரஷ்யாவை உருவாக்க வேண்டும் என்று டுக்கினாவின் தந்தை நீண்டகாலமாகக் கூறி வருகிறார். இதில் உக்ரேனும் அடங்கும்.
நேட்டோவில் உக்ரேன் இணைந்தால் அது அழிந்துவிடும் என்று டுக்கினாவின் நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.
அதையடுத்து, அமெரிக்கா வெளியிட்ட தடைப் பட்டியலில் டுக்கினாவின் பெயரும் சேர்க்கப்பட்டது.

