செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
883a2ce2-3265-446f-bf39-ddaebfb71448
-

சீனாவில் மேலும் 2,181 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் மேலும் 2,181 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஷங்ஹாய் நகரில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், நிலைமை மோசமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 553 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் 1,628 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டும் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

நேற்று முன்தினம் நிலவரப்படி சீனாவில் 3.43 பில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டதாக ஆணையம் கூறியது.

இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்கள் இல்லாத அளவில் சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற பலருக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹைனான் தீவுக்குச் சென்றோரில் ஏறத்தாழ 1,100 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலை மோசடியில் ஈடுபட்ட

ஐவர் ஹாங்காங்கில் கைது

ஹாங்காங்: வேலை மோசடி தொடர்பாக ஹாங்காங்கைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் சம்பள வேலை தருவதாகப் பொய் கூறி பலரை இவர்கள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது. வேலையில் சேர ஆவலுடன் மியன்மார், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. சிலர் காதல் மோசடியில் சிக்கி வெளிநாடுகளில் தங்கள் விருப்பத்துக்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டோர் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டனர்.

இந்த மோசடிக்காரர்கள் விரித்த வலையில் சிக்கிய ஹாங்காங் நாட்டினரைக் காப்பாற்ற பணிக்குழு ஒன்றை அதிகாரிகள் அமைத்தனர்.

உதவி கேட்டு 36 பேர் காவல்துறையை அழைத்ததாகவும் அவர்களில் ஏறத்தாழ அனைவரும் வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஹாங்காங் காவல்துறை தெரிவித்தது.

வேலை மோசடி தொடர்பாக மூன்று ஆடவர்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 22 ஹாங்காங் நாட்டினர் கம்போடியாவிலும் மியன்மாரிலும் சிக்கித் தவிப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் ஒன்பது பேர் தங்கள் குடும்பத்தாருடன் அல்லது ஹாங்காங் காவல்துறையுடன் தொடர்புகொள்ளவில்லை.

இவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சென்றடைந்ததும் அவர்களது கடப்பிதழ்களை மோசடிக்காரர்கள் அவர்களிடமிருந்து பறித்ததாக அறியப்படுகிறது.