இப்போது அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம்தமக்கு இல்லை என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டையே அலைக்கழித்து வருகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன.
பல குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவதாகவும் தமிழக ஊடகங்கள் கூறி வருகின்றன.
மக்கள் பல நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அப்போதைய அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டே வெளியேற வைத்தனர்.
இலங்கையிலிருந்து மாலத்தீவு சென்று, பின்பு சிங்கப்பூர் வந்த அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் அடைந்துள்ளார்.
பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பதவி விலகினார். அவர் வெளிநாட்டுக்கு செல்ல அங்குள்ள நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
பொதுமக்கள் தொடர்ந்து ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்று செய்திகள் பரவின. இதனை அவர் மறுத்து உள்ளார்.
"அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நேரம் வரும் போது மட்டுமே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் அரசியலில் இருப்பேன். இலங்கை பொது ஜன பெரமுனாவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நான் ஒரு வழக்கறிஞர், என்னால் நீதிமன்றத்தில் வாதாட முடியும். தேவைப்பட்டால் நான் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயார்," என்று அவர் கூறியுள்ளார்.

