துபாய்: ஈரானுக்கான ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தூதர் இன்னும் சில நாள்களில் தெஹ்ரானுக்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரானுக்கான தனது தூதரை அது மீட்டுக்கொண்டது.
தூதர் சயிஃப் முகமது அல் ஸாபி ஈரானில் தமது பொறுப்புகளை மீண்டும் தொடருவார் என்று ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
ஷியா முஸ்லிம் தலைவர் நிமிர் அல்-நிமிருக்கு 2016ஆம் ஆண்டில் ரியாத் மரண தண்டனையை நிறைவேற்றியதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள சவூதி அரேபியாவின் அரசதந்திரப் பணியிடங்கள் தாக்கப்பட்டன.
அதையடுத்து சவூதி அரேபியாவிற்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய அரபுச் சிற்றரசு தனது தூதரை ஈரானில் இருந்து மீட்டுக்கொண்டது.

