லண்டன்: பிரெஞ்சுக் கால்வாயைக் கடந்து வடக்கு பிரான்சிலிருந்து பிரிட்டனுக்குள் சிறிய படகுகளில் நுழைந்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றுமுன்தினம் பிரெஞ்சு கால்வாயைக் கடந்த சுமார் 1,295 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு கூறியது. இதற்கு முன்னர் ஆக அதிகமாக 2021 நவம்பர் 11ஆம் தேதி, 1,185 பேர் பிரெஞ்சு கால்வாய் வழியாக பிரிட்டன் சென்றனர். இவ்வாண்டு சுமார் 22,670 பேர் பிரெஞ்சு கால்வாய் வழி பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். இது 2021ன் இதே காலகட்டத்தைவிட இரட்டிப்பாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியதும் எல்லைகளைக் கட்டுப் படுத்தி ஆள்கடத்தலைத் தடுக்கப்போவதாக பிரிட்டன் உறுதி அளித்தது. ஆனால் அதிகரிக்கும் ஆள்கடத்தல் அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

