பெய்ஜிங்: சீனா, தனது திருமண, பிறப்பு விகிதம் மேலும் சரிந்துள்ளதாகவும் கொவிட்-19 பரவலும் இதில் பங்கு வகித்ததாகவும் கூறியுள்ளது. கல்வி, பிள்ளை வளர்ப்பு ஆகிய செலவுகள் அதிகம் என்பதால் சீனாவில் அண்மைய ஆண்டுகளில் திருமண விகிதமும், பிறப்பு விகிதமும் வேகமாகக் குறைந்து வருகின்றன.
கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா ஒன்றன்பின்ஒன்றாக அறிவித்த முடக்கங் களால், மக்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை போயிருக்கலாம் என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், சிலரின் திருமண, குழந்தைப் பேற்றுத் திட்டங்களைக் கிருமிப் பரவல் பாதித்துள்ளதாகக் கூறியது.
பல பெண்கள் திருமணத்தையும் பிள்ளைப்பேற்றையும் தள்ளிப்போடும் போக்கு தொடர்வதாகவும் ஆணையம் கூறியது.
இள வயதினர் நகரங்களுக்கு அதிகமாகக் குடிபெயர்வதும், கல்விக்குக் கூடுதல் காலம் ஒதுக்குவதும், அதிக வேலைப் பளுவுள்ள வேலையிடங்களும் பிறப்பு விகிதம் குறைவதில் பங்கு வகிக்கின்றன.

