உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மலேசியாவின் 1ஐஎம்டிபி வழக்கில் உயர் அதிகாரிகள் பல பில்லியன் டாலரை அரசாங்கத்திடமிருந்து களவாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 1ஐஎம்டிபி வழக்கு பற்றி தமிழ் முரசு விளக்குகிறது.
1ஐஎம்டிபி, மலேசிய முதலீட்டாளர் திரு ஜோ லோவின் உதவியுடன் மலேசிய அரசாங்கம் தொடங்கிய முதலீட்டு நிதியாகும்.
2009ல் திரு நஜிப் ரசாக் பிரதமராகப் பதவியேற்ற சில நாளிலேயே அவர் அந்த நிதியை லோவுடன் சேர்ந்து தொடங்கினார். முதலீட்டுத் திட்டங்களுக்காகவும் கூட்டுத் திட்டங்களுக்காகவும் பல பில்லியன் டாலர் பங்குப் பத்திரங்களை 1ஐஎம்டிபி விற்றது.
மலேசியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள எரிசக்தி ஆலைகளில் 1ஐஎம்டிபி முதலீடு செய்தது. கோலாலம்பூரில் சொத்துகளிலும் அது பணம் போட்டது. 1ஐஎம்டிபி ஆலோசனை மன்றத்தில் 2016ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த திரு நஜிப் அதை அணுக்கமாகக் கண்காணித்தார்.
ஆனால் பிறநாடுகளின் வங்கிக் கணக்குகளுக்கும் போலி நிறுவனங்களுக்கும் 4.5 பில்லியன் டாலர் (S$6.3 பில்லியன்) திருப்பிவிடப்பட்டதாகக் அமெரிக்க நீதித் துறை கூறியது.
அரசியல் திருட்டின் தொடர்பில் அமெரிக்க நீதித் துறை நடத்திய ஆகப் பெரிய விசாரணை அது. மேலும் பல பில்லியன் டாலர் பணத்தைக் காணவில்லை என்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தப் பணத்தை வைத்து 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சொகுசுப் படகு, தனியார் விமானம், சொத்துகள், நகைகள், புகழ்பெற்ற ஓவியரான வான் கோ வரைந்த சித்திரம் உள்ளிட்டவற்றை லோவும் அவரது சகாகக்களும் வாங்கினர் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
2013ல் 'தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்திரீட்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் பணம் போடவும் 1ஐஎம்டிபி பணம் பயன்பட்டதாக என்று அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்குகள் கூறுகின்றன.
தலைமறைவாகிவிட்ட ஜோ லோவுக்கு எதிராக மலேசியாவிலும் அமெரிக்கா விலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. லோ சீனாவில் தங்கியுள்ளார் என்று கூறப்படுவதை பெய்ஜிங் மறுத்து வருகிறது.
திரு நஜிப் 1ஐஎம்டிபியிலிருந்து ஒரு பில்லியனுக்கு மேல் பணத்தைச் சட்ட விரோதமாகப் பெற்றார் என்று மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வழக்குகளில் மலேசிய அதிகாரி 1 எனும் நகர் ஒரு பில்லியன் டாலரைச் சட்டவிரோதமாகப் பெற்றார் என்றும் அதில் ஒரு தொகையில் மனைவிக்கு நகை வாங்கினார் என்றும் குறிப்பிடப்படுகிறது.
மலேசியாவில் 2013ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர், அந்நபர் US$681 மில்லியனைப் பெற்றார் என்றும் கூறப்பட்டது.
1ஐஎம்டிபி மோசடியால் மலேசிய மக்கள் கோபம் அடைந்திருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நஜிப்புடன் அவர் அப்போது தலைமை வகித்த அம்னோ கட்சியும் தோல்வி அடைந்தது. ஆட்சி மாறி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது மீண்டும் பதவிக்கு வந்தார்.
1ஐஎம்டிபியிலும் மற்ற அரசாங்க நிறு வனங்களிலும் ஏற்பட்ட இழப்பின் தொடர்பில் திரு நஜிப் மீது 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் மீதான ஐந்து வழக்கு களிலும் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர் பல்லாண்டுகள் சிறையில் இருக்க வேண்டி வரும். பெரும்பணம் அபராதமாக விதிக்கப்படும்.
2020 ஜூலை மாதம், முதல் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் ஆகிய குற்றங்களை திரு நஜிப் புரிந்தார் என்ற நீதிமன்றம், அவருக்கு 12 ஆண்டு சிறையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
கடந்த ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை உறுதி செய்தது. நேற்று மத்திய நீதிமன்றம் திரு நஜிப்பின் இறுதி மேல்முறையீட்டை நிராகரித்ததை அடுத்து அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
திரு நஜிப் தமக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் மறத்துள்ளார்.
1ஐஎம்டி நிதி மோசடி வழக்கில் திரு நஜிப் குற்றவாளி என்று நிரூபனமானாலும் மக்களில் சிலரிடமும் அம்னோவிலும் அவ ருக்கு தொடர்ந்து செல்வாக்கு உள்ளது.

