பேங்காக்: தாய்லாந்து பிரதமர் பிராயுத் சானோச்சாவைத் தமது பிரதமர் பொறுப்புகள் அனைத்தையும் நிறுத்துமாறு அந்நாட்டின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரு பிராயுத்தின் எட்டு ஆண்டுகால தவணைக் காலம் குறித்து சட்ட ரீதியாக மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் வெளிவரும் வரை அவர் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறிக்கை ஒன்றின் மூலம் எழுத்து வடிவில் நீதிமன்றம் இந்த முடிவை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியது. துணைப் பிரதமர் பிராவித் வோங்சுவான் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று தாய்லாந்தின் காவோசொட் நாளிதழ் தெரிவித்தது.
திரு பிராயுத்தின் தவணைக்காலம் எப்போது நிறைவடையவேண்டும் என்பதை முடிவுசெய்யுமாறு தாய்லாந்தின் எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் சென்ற வாரம் அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். அதைத் தொடர்ந்து திரு பிராயுத் தற்காலிகமாகப் பதவி விலகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து சட்டத்தின்கீழ் ஒரு பிரதமர் அதிகபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவியில் இருக்கக்கூடாது என்பது எதிர்க் கட்சியினரின் வாதம். திரு பிராயுத் அதிகபட்ச தவணைக்காலத்தைத் தாண்டி பிரதமர் பதவியை வகித்து வருகிறாரா என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாய்லாந்து பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு பிராயுத், பிரதமர் வேட்பாளராக அதில் போட்டியிடத் தகுதிபெறுவாரா என்பதையும் நீதிமன்றம் முடிவுசெய்யும்.
திரு பிராயுத் பிரதமராக இருப்பதை எதிர்த்து தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் தொடர்ந்து நான்காவது நாளாக பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் பேங்காக்கின் அரசாங்க அலுவலக மாளிகைக்கு வெளியே இரவு முழுவதும் இருந்தனர்.
திரு பிராயுத், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியிலிருந்து தாய்லாந்து பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். அன்றிலிருந்து எட்டு ஆண்டுகளாக அவர் பிரதமராக இருந்துவிட்டார் என்றும் அதனால் அவர் இப்போது பதவி விலகவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.
திரு பிராயுத் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நேற்றுடன் எட்டு ஆண்டுகள் ஆயின.

