மணிலா: கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வறுமைக்கு எதிரான போராட்டம் குறைந்தது ஈராண்டுகள் பின்தங்கிப்போனதாக 'ஏடிபி' எனும் ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. அதனால் வறுமையிலிருந்து வெளிவர பல நாடுகள் மேலும் சிரமப்படும் என்று அந்த வங்கி குறிப்பிட்டது.
கொள்ளைநோய்ப் பரவல் இடம்பெறாமல் இருந்திருந்தால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 2020ஆம் ஆண்டு கடும் வறுமைக்கு ஆளானோரின் விகிதம் 2.9 விழுக்காடாகக் குறைந்திருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக விகிதம் ஐந்து விழுக்காட்டுக்குக் கூடியது.
சென்ற ஆண்டு 3.8 விழுக்காட்டினர் கடும் வறுமைக்கு ஆளானதாகப் பதிவானது. இந்த ஆண்டுக்கான விகிதம் மூன்று விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 2.70 வெள்ளிக்கும் குறைவான தொகையைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவோர் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தப்படுவர்.
சென்ற ஆண்டு ஆசியாவில் வளரும் நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் குறைந்தது 20 விழுக்காட்டினர் கடும் வறுமைக்கு ஆளாயினர் அல்லது ஓரளவு வறுமையால் வாடினர். சமமான பொருளியல் வாய்ப்புகளை உருவாக்கவும் சமூக அளவில் இருக்கக்கூடிய பொருளியல் ரீதியான பிரிவுகளைக் குறைக்கவும் அரசாங்கங்கள் மீள்திறன், புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்குவது ஆகிய அம்சங்களில் அதிக கவனம் செலுத்தினால் 2030ஆம் ஆண்டுக்குள் வறுமை விகிதத்தைப் பாதியாகக் குறைக்கலாம் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி குறிப்பிட்டது.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை ஆசிய பசிபிக் நாடுகளில் சுமார் பாதி மட்டுமே கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாகவும் வங்கி தெரிவித்தது.

