தைப்பே: தைவான் அடுத்த ஆண்டு அதன் தற்காப்பிற்கு சாதனை அளவாக NT$586.3 பில்லியன் (S$27 பி.) நிதி ஒதுக்க பரிந்துரைத்து உள்ளது. தைவானைச் சுற்றி சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தைவான் அதிபர் சாய் இங் வென்னின் அமைச்சரவை தற்காப்பிற்குப் பரிந்துரைத்துள்ள இந்த நிதி ஒதுக்கீடு, ஆண்டு அடிப்படையில் 13.9 விழுக்காடு அதிகம்.
புதிய போர் விமானங்களையும் இதர உபகரணங்களையும் வாங்க NT$108.3 பில்லியன் ஒதுக்குவதும் இதில் அடங்கும்.
தைவான் அதன் தற்காப்பிற்கு ஒதுக்கும் நிதி, 2017லிருந்து தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தைவான் அதன் தற்காப்பிற்கு ஒதுக்கும் நிதி, 2017லிருந்து அண்மைய ஆண்டுகள் வரை 4 விழுக்காட்டிற்கும் குறைவாக வளர்ச்சி கண்டு வந்தது. ஆனால், இம்முறை அதிகரிப்பு ஈரிலக்கத்தை எட்டி உள்ளது.
தற்காப்புக்காக ஒதுக்கப்படும் நிதி பெரும்பாலும் செயல்பாட்டுச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் என்று தைவான் புள்ளிவிவரத்துறை அமைச்சர் சூ சர் மிங் கூறினார்.
இதற்கிடையே, சீனா அதன் தற்காப்புக்காக இவ்வாண்டு 7.1 விழுக்காடு கூடுதலாக செலவழிக்கப் போவதாக கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது. தற்காப்பிற்காக அதன் செலவினம் 1.45 டிரில்லியன் யுவானாக (S$294.5 பி.) இருக்கும்.
தைவான் அருகே சீனா ராணுவ நடவடிக்கைகளைக் குறைத்துள்ள போதிலும் அவை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் கரையோரப் பகுதியில் இன்றும் நாளையும் நேரடிப் போர்ப் பயிற்சி நடத்தப்படும் என்று ஃபூஜியான் அதிகாரிகள் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தனர்.
தைவானிய ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கு அதிபர் சாய் முன்னுரிமை அளித்துள்ளார்.
மற்றொரு நிலவரத்தில், தைவான் அதன் கடலோரத் தீவுகளில் வானூர்தி தற்காப்பு முறையை அடுத்த ஆண்டு முடுக்கிவிடத் தொடங்கும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
சீனாவின் கரையோரப் பகுதிக்கு அருகே உள்ள காவல் சாவடிக்கு மேலே பறந்த ஆளில்லா சீன வானூர்தியை நோக்கி தைவானிய ராணுவ வீரர்கள் கல்வீசுவதைக் காட்டும் காணொளி வலம் வந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றதை அடுத்து, தைவான் அதன் கடலோரத் தீவுகளில் சீன வானூர்திகள் அடிக்கடி பறந்து வேவு பார்ப்பது குறித்து புகார் அளித்துள்ளது.

