பேட்மிண்டன்: கைக்கு எட்டும் தூரத்தில் லோவுக்கு மற்றொரு பதக்கம்
தோக்கியோ: பேட்மிண்டன் உலக வெற்றியாளர் போட்டியை ஏற்கெனவே வென்றுள்ள சிங்கப்பூர் வீரர் லோ கியன் இயூக்கு (படம்) கைக்கு எட்டும் தூரத்தில் மற்றோர் உலக வெற்றியாளர் பதக்கம் உள்ளது.
உலகத் தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள இவர், தோக்கியோவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹாங்காங்கின் ஏங்கஸ் இங்கை வீழ்த்தி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களில் 21-11, 11-4 எனும் ஆட்டக்கணக்கில் லோவைப் பின்தொடர்ந்த இங், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்து வீரர் குன்லாவுட் விட்டிட்சார்னை லோ எதிர்கொள்கிறார். அண்மையில் நடந்து முடிந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இவ்விருவரும் மோதினர். அப்போது லோவுக்கு ஏற்பட்ட சோர்வைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட குன்லாவுட், 21-13, 21-13 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார்.
ஆனால், இம்முறை புதுத்தெம்புடன் களமிறங்கியுள்ள லோ, குன்லாவுட்டிற்கு எதிராக போராடி வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் பார்சிலோனா, மேன்சிட்டி சமநிலை
பார்சிலோனா: நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய் ஒன்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அது பற்றிய ஆய்வுக்கு நிதி திரட்டவும் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் பார்சிலோனாவும் மான்செஸ்டர் சிட்டியும் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.
இந்த ஆட்டத்தை அரங்கில் நேரடியாகக் கண்ட 90,000க்கும் அதிகமான ரசிகர்கள், பார்சிலோனாவின் முன்னாள் கோல்காப்பாளரும் உதவித் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான யுவான் கார்லோஸ் உன்ஸுவுக்கு (படம்) எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஈராண்டுகளுக்கு முன்பு அவருக்கு 'அமியோட்ரோஃபிக் லெட்டரல் ஸ்க்லெரோசிச்' எனும் நரம்பியல் பிரச்சினை கண்டறியப்பட்டது.
பார்சிலோனாவில் உதவி மேலாளராக ஒரு சாம்பியன்ஸ் லீக், இரு ஸ்பானிய லீக், ஒரு கோப்பா டெல் ரே ஆகிய கிண்ணங்களை உன்ஸு வென்றார்.

