நஜிப்பை மன்னித்து விடுவிக்க மலேசிய மன்னருக்கு நெருக்குதல்

நஜிப்பை மன்னித்து விடுவிக்க மலேசிய மன்னருக்கு நெருக்குதல்

1 mins read
791f0d6f-8b2b-4729-ae86-b464fdd578b1
ஆகஸ்ட் 24 அன்று மன்னர் மாளிகைக்கு வெளியே திரண்ட நஜிப் ஆதரவாளர்கள் (படம்: ஏஃபி) -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் சிறையிலிருந்து விடுதலை பெற அந்நாட்டு மன்னர் அவரை மன்னித்து விடுவித்தால் மட்டுமே முடியும் என்று நம்பப்படுகிறது.

1எம்டிபி விவகாரத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள நஜிப்பின் கடைசி முயற்சி மலேசிய மன்னரின் மன்னிப்பை பெறுவதாகும்.

நஜிப்பின் ஆதரவாளர்கள் 300 பேர் புதன்கிழமை அன்று மன்னர் மாளிகைக்கு வெளியே திரண்டனர். தண்டனை அளித்த நீதிபதிகளுக்கு கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையே முரண்பாடு இருந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் மன்னர் சுல்தான் அப்துல் சுல்தான் அகமது ‌ஷா நஜிப்பை மன்னித்து விடுவிக்கவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், மன்னர் நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது என்று கோரி நஜிப் எதிர்ப்பாளர்கள் இணையத்தில் மனு சமர்ப்பித்துள்ளனர். இதுவரை 100,000க்கும் மேற்பட்டவர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில், மன்னர் ஒரு சரியான முடிவை எடுப்பது முக்கியம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்தனர். நஜிப்பை மன்னித்து விடுவித்தால் பெரும்பாலான மலேசியர்கள் சினமடையக்கூடும் என நம்பப்படுகிறது. உலகின் ஆக மோசமான நிதி மோசடிகளில் ஒன்றான 1எம்டிபி விவகாரத்தில் நஜிப்பை மன்னர் மன்னிப்பது சற்று சிரமம்தான் என்பது அரசியல் கவனிப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது.