ஜகார்த்தா: சலுகை விலையில் விற்கப்பட்டுவரும் எரிபொருள் விலையை இந்தோனீசியா 30லிருந்து 40 விழுக்காடு வரை உயர்த்தக்கூடும். சலுகைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கும் தொகை தொடர்பில் எரிபொருள் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிபர் ஜோக்கோ விடோடோவின் ஆளும் கூட்டணியில் உள்ள அரசியல்வாதிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
இவ்வாரத் தொடக்கத்தில் இந்தோனீசிய அரசாங்கத்தின் கச்சா எண்ணெய் நிறுவனமான பெர்த்தாமினாவுடன் நடைபெற்ற ரகசிய நாடாளுமன்றச் சந்திப்பில் இத்தகவலைப் பெற்றதாக நாடாளுமன்றத்தின் எரிசக்திக் குழுவின் துணைத் தலைவர் எடி சொவெப்பார்னோ கூறினார்.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பொருளியலான இந்தோனீசியாவில் இவ்வாண்டுக்காக எரிசக்தி சலுகைக்கென ஒதுக்கப்பட்டிருந்த தொகை மும்மடங்காகி 502 டிரில்லியன் ருப்பியாவிற்குக் கூடியுள்ளது. இந்தத் தொகை, ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறும் தொகையில் சுமார் 16 விழுக்காடு.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை கூடுவதாலும் ருப்பியாவின் மதிப்பு குறைந்து வருவதாலும் இந்நிலை உருவாகியுள்ளது. எரிபொருள் விலையை உயர்த்தாவிட்டால் சலுகைகளுக்கென கூடுதல் பணம் தேவைப்படும் என்று இந்தோனீசிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.
எரிபொருள் விற்பனையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவருதற்கும் பெர்த்தாமினா ஆதரவு தருவதாகத் திரு எடி கூறினார். பெரிய இயந்திரங்களில் இயங்கும் வாகனங்களை ஓட்டுவோர் சலுகை விலையில் எரிபொருள் வாங்குவதைத் தடை செய்வது பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் ஒன்று.
"இது (விலையை உயர்த்தி விற்பனையைக் கட்டுப்படுத்துவது) மக்களுக்கு ஆகக் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எங்கள் கருத்து," என்று திரு எடி சொன்னார். இந்தோனீசியாவின் பணவீக்க விகிதம் கடந்த ஏழாண்டுகளில் காணாத அளவு சென்ற மாதம் 4.94 விழுக்காட்டைத் தொட்டது. எனினும், சலுகைகளால் வளர்ந்த நாடுகளில் பதிவாவதையும்விட இந்தோனீசியாவின் பணவீக்க விகிதம் மிகவும் குறைவு.

