'அம்னோவின் கதை முடியவில்லை'

'அம்னோவின் கதை முடியவில்லை'

2 mins read
87264d51-b017-4643-bf93-b370919910f3
நஜிப் ரசாக். படம்: இபிஏ -

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் சிறைக்கு அனுப்­பப்­பட்­டா­லும் அம்னோ கட்­சி­யின் கதை நிறை­வடைந்­து­விட்­ட­தாக அர்த்­தம் இல்லை என்று அதன் தலை­வர் ஸாஹிட் ஹமிடி கூறி­யுள்­ளார். 69 வயது திரு நஜிப், மலே­சி­யா­வின் ஆளும் கூட்­ட­ணியில் முக்­கிய அங்­கம் வகிக்­கும் அம்னோவின் முன்­னாள் தலை­வ­ரும் ஆவார்.

"தங்­க­ளின் திட்­டங்­க­ளை­யும் தவ­றான உத்­தி­க­ளை­யும் இனி எளி­தில் செயல்­ப­டுத்­த­லாம் என்று பலர் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர். அவர்­கள் தவ­றா­கக் கணித்­துள்­ளனர்," என்று கட்­சி­யைத் தாழ்­வாக விமர்­சிப்­ப­வர்­க­ளைப் பற்­றித் திரு ஸாஹிட் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டார். அவ­ரும் சட்­ட­விரோ­த­மா­கப் பணம் பறித்­த­தன் தொடர்­பில் சில குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

"நாட்டை மீண்­டும் செழிக்­க­வைக்­கும் போராட்­டத்­திற்கு நஜிப் விவ­கா­ரம் ஒரு முடி­வாக இருக்­காது. மாறாக, நாங்­கள் ஒன்­றாக பணி­யில் ஈடு­பட்டு கூடு­தல் நம்­பிக்­கை­யு­டன் நாங்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட இது உந்­து­த­லாக அமை­யும்," என்று அவர் சொன்னார்.

சிறை­யில் இருந்­தா­லும் முக்­கிய அர­சி­யல் முடி­வு­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஆற்­றல் திரு நஜிப்­பிற்கு இருந்து வருவதாக மலாய் மெயில் நாளி­த­ழில் வெளி­யான செய்தி குறிப்­பிட்­டது.

இதற்­கி­டையே, திரு நஜிப்­பிற்கு மன்­னிப்பு வழங்­கு­வ­தன் தொடர்­பில் மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா சுல்­தான் அக­மது ஷா நெருக்­கு­தலை எதிர்­நோக்­கக்கூடும் என்று கருதப்படுகிறது.

திரு நஜிப்பிற்கு மன்­னிப்பு வழங்­கி­னால் மாமன்னர் நீதி­மன்­றத் தீர்ப்பை மதிக்­க­வேண்­டும் என்­பவர்­க­ளின் கண்­ட­னத்­திற்கு ஆளா­க­லாம். அதே வேளை­யில் திரு நஜிப்­பிற்கு வாக்­கா­ளர்­க­ளிடை­யே­யும் கட்சி உறுப்­பி­னர்­கள் மத்தி­யி­லும் தொடர்ந்து ஆத­ரவு இருந்து வருகிறது.