இழப்பீடு கேட்டு ஃபைசர் மருந்து நிறுவனம்மீது மொடர்னா வழக்கு
வாஷிங்டன்: கொவிட்-19 தடுப்பூசிகளுக்கான தனது கண்டுபிடிப்பை ஃபைசர், பயோஎன்டெக் நிறுவனங்கள் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவ்விரு நிறுவனங்களின் மீதும் மொடர்னா வழக்கு தொடுத்துள்ளது.
மதிநுட்பச் சொத்து விதிமுறைகளை மீறி தனக்குச் சொந்தமான எம்ஆர்என்ஏ முறையைப் பயன்படுத்தி ஃபைசரும் ஜெர்மனியின் பயோஎன்டெக்கும் கொமிர்னாட்டி தடுப்பூசியை உருவாக்கின என்பது மொடர்னாவின் வாதம்.
ஃபைசர், பயோஎன்டெக் இரண்டும் சேர்ந்து உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசியை விற்பதற்குத் தடை விதிக்க நீதிமன்றங்களைத் தான், கேட்டுக்கொள்ளவில்லை என்று மொடர்னா கூறியது.
இவ்வாண்டு மார்ச் எட்டாம் தேதியிலிருந்து தற்போதைய காலகட்டம் வரைக்குமான இழப்பீட்டுத் தொகையைப் பெற மொடர்னா விரும்புகிறது. 92 குறைந்த வருமான, நடுத்தர நாடுகளுக்கு விற்கப்பட்ட ஃபைசரின் தடுப்பூசிகளுக்கு இழப்பீடு கேட்கப்போவதில்லை என்றும் மொடர்னா குறிப்பிட்டது.
கப்பலில் தீ; 80 பேர் தப்பினர்
மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டில் தீப்பிடித்த பயணிகள் கப்பல் ஒன்றில் இருந்து 80க்கும் மேற்பட்டவர்கள் உயிர்பிழைத்தனர். ஓரியண்டல் மிண்டோரோ மாநிலத்தில் இருந்து மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த தீவிபத்து நிகழ்ந்தது. அப்போது அதில் 49 பயணிகள், 38 பணியாளர்கள் இருந்தனர். கப்பல் முழுவதும் தீ பரவியதால் பலர் கடலில் குதித்தனர். உடனே கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 2 பேரைக் காணவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெண்கள் நாட்டைவிட்டு வெளியேற தலிபான் தடை
காபூல்: பெண்கள் காபூலைவிட்டு வெளியேறி கஜகஸ்தான், கத்தார் நாடுகளுக்குச் சென்று கல்வி கற்க தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது. பெண்களும் ஆண்களும் காபூலைவிட்டு வெளியேற திட்டமிட்டிருந்த நிலையில், ஆண்கள் மட்டும் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சென்ற ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, ஆப்கானிஸ்தானைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தலிபான் அமைப்பு பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
இவ்வாண்டில் கொவிட்-19க்கு
10 லட்சம் பேர் மரணம்
ஜெனிவா: நடப்பு ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனா கிருமித்தொற்றுக்கு மாண்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் இது மிகவும் துயரமான மைல்கல் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம், "கிருமித்தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. உருமாறிய ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது. ஜூன் மாத இறுதிக்குள் நாட்டில் 70% மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், 136 நாடுகள் இதனை பூர்த்தி செய்யவில்லை. 66 நாடுகளில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 40%க்கும் குறைவாக உள்ளது," என்றார் அவர்.

