மாஸ்கோ: நேட்டோ கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தில் இருந்து உக்ரேன் பின்வாங்கினாலும் அதன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா நிறுத்தாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமான மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் ரஷ்ய பாதுகாப்பு மன்றத்தின் தற்போதைய துணைத் தலைவருமான டிமெட்ரி மெட்வேட் இதனைக் கூறினார்.
உக்ரேன் மீதான படையெடுப்பை, ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா கூறி வருகிறது.
"நேட்டோவில் இணைவதில் இருந்து பின்வாங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், இப்போதைய நிலவரத்தின்படி அமைதியை நிலைநாட்ட அது போதுமானது இல்லை," என்றார் அவர்.
தனது இலக்கை அடையும்வரை உக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று அவர் சொன்னார்.
உக்ரேனில் இருந்து நாசிசத்தை அழிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று புட்டின் கூறுகிறார். போருக்கான ரஷ்யாவின் ஆதாரமற்ற சாக்குப்போக்கு இது என்று உக்ரேனும் மேற்கத்திய நாடுகளும் கூறுகின்றன.
அத்துடன் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாகவும் மெட்வேவ் சொன்னார்.
ரஷ்யாவின் ஆறு மாதத்திற்கும் மேலான படையெடுப்பில், உக்ரேனின் பல பகுதிகள் தரைமட்டமாகிவிட்டன.

