பாரிஸ்: எரிசக்தியை இறக்குமதி செய்வதற்கான செலவுகள் அதிகரித்து வருவதால், அதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் மும்முரமாக உள்ளன. இதனால், உலகம் முழுவதும் அணுசக்தி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஜப்பானின் ஃபுக்குஷிமாவில் 2011ல் நடந்த பேரழிவிற்குப் பிறகு அணுசக்தி மீதான முதலீடுகள் குறையத் தொடங்கின. ஆனால், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி பற்றாக்குறை மீண்டும் அணுசக்தி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 32 நாடுகளில் பயன்படுத்தப்படும் அணுசக்தி, உலகின் மின்சார உற்பத்தியில் 10 விழுக்காட்டை ஈடுகட்டுகிறது. 2050ல் இது இரட்டிப்பாகும் என்று அனைத்துலக அணுசக்தி நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணுசக்தி உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன.
ஜப்பானின் அணுசக்தி தொழிற்துறைக்குப் புத்துயிர் அளிக்கவும் புதிய அணுமின் நிலையங்களை உருவாக்கவும் பிரதமர் கிஷிடா சென்ற வாரம் வலியுறுத்தினார்.
அணுசக்தி உற்பத்தியை முடிவுக்குக் கொண்டு வரும் தனது திட்டத்தை பெல்ஜியம் ஒத்தி வைத்துள்ளது.

