அமெரிக்காவின் இரு போர்க்கப்பல்கள் தைவான் நீரிணையின் அனைத்துலகக் கடல் பகுதியில் செல்வதாக மூன்று அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசியின் தைவானியப் பயணத்திற்குப் பிறகு சீனாவுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அத்தகைய பயிற்சி நடைபெறுவது இதுவே முதன்முறை.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் சுதந்திரத்திற்கும் வெளிப்படையான நிலைக்குமான அமெரிக்காவின் கடப்பாட்டைக் காண்பிப்பதே போர்க்கப்பல்கள் தைவான் நீரிணையில் செல்வதற்கான காரணம் என்று அமெரிக்கக் கப்பல்படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தனது வழக்கமான ஒரு நடவடிக்கைதான் என்றும் அனைத்துலகச் சட்டத்தின்கீழ்தான் தாங்கள் செயல்படுகிறோம் என்றும் குறிப்பிட்ட அந்த அறிக்கையில், எந்த ஒரு நாட்டுக்குச் சொந்தமான கடல்பகுதிக்கும் அப்பாற்பட்ட இடத்தில்தான் கப்பல்கள் செலுத்தப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் அனைத்துலகச் சட்டங்கள் அனுமதிக்கும் எந்த இடத்திலும் பறக்கும், கடல்வழி செல்லும் இயங்கும் என்றும் குறிப்பிட்டது.

