வாஷிங்டன்: தைவான் நீரிணை வழியாக அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் செல்வதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மூன்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி தைவானுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டார்.
தைவானைத் தனது ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
அதையடுத்து, தைவான் நீரிணையில் சீனா பல போர்ப் பயிற்சிகளை நடத்தியது.
அந்த வட்டாரத்தில் பதற்றமிக்க சூழ்நிலை நிலவிவரும் வேளையில், ஏவுகணைகளை ஏந்திக்கொண்டு தனது இரண்டு போர்க்கப்பல்கள் வழக்கம் போல் தைவான் நீரிணை வழியாக அனைத்துலகச்
சட்டத்துக்குக் கட்டுப்பட்டு சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க கடற்படை கூறியது.
எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லாத கடற்பகுதியில் அந்த இரு கப்பல்களும் பயணம் செய்ததாக அமெரிக்கக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்துலகச் சட்டம் அனுமதி வழங்கும் அனைத்து இடங்களிலும் அமெரிக்க ராணுவம் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக தைவான் நீரிணையில் உள்ள அனைத்துலகக் கடற்பகுதியை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் கடந்து செல்ல எட்டிலிருந்து 12 மணி நேரம் எடுக்கும்.
அவ்வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களை சீனா மிக உன்னிப்பாகக் கண்காணிக்கும்.
தற்போது தைவான் நீரிணை வழியாகச் செல்லும் இரு அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் கண்காணிப்பதாகவும் தன்னைத் தூண்டும் வகையில் அவை ஏதேனும் முயற்சிகளில் ஈடுபட்டால் அவை முறியடிக்கப்படும் என்றும் சீன ராணுவம் நேற்று கூறியது.
அந்த இரு போர்க்கப்பல்களின் அனைத்து நடவடிக்கைகளைப் பற்றியும் தங்களுக்குத் தெரியும் என்று சீனாவின் கிழக்குப் பகுதி ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

