தற்காப்பு உறவை வலுப்படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா

தற்காப்பு உறவை வலுப்படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா

1 mins read
acd9d88f-8a2a-4154-b47d-08c532689f08
-

சிட்னி: பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடனான தற்காப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் அந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வப் பயணம் இன்று தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதி நிறைவடையும்.

ஒரே மாதிரியான சிந்தனையுடைய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் முக்கியத்துவத்தை உக்ரேன் போர் அதிகரித்துள்ளதாக திரு மார்ல்ஸ் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளுடன் தற்காப்பு உறவை வலுப்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா கொண்டுள்ள கடப்பாட்டைக் காட்ட இந்தப் பயணம் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.

பிரான்சுடன் ஆஸ்திரேலியா கொண்டிருக்கும் தற்காப்பு உறவு ஆகப் பழமையானது என்றும் பிரான்ஸ் மிக ஆற்றல்மிக்க பங்காளி என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்தது.

ஜெர்மனியின் தற்காப்புத் துறைப் பிரதிநிதிகளுடன் திரு மார்ல்ஸ் கலந்துரையாடல்களில் ஈடுபட இருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள கப்பல் பட்டறைகளை அவர் நேரில் சென்று பார்ப்பார் என்று அறியப்படுகிறது. பிரட்டனுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தற்காப்பு உறவு இரு நாடுகளுக்கும் பலனைத் தருவதாக திரு மார்ல்ஸ் கூறினார்.

தற்காப்பு உறவை மேம்படுத்த கடந்த ஜூன் மாதம் திரு மார்ல்ஸ் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டார்.