விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
52dafd61-5dcb-44a5-b1b4-7d35725decea
-

லிவர்பூலின் கோல் பசிக்கு இரையாகிய போர்ன்மத்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை 9-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் நேற்று முன்தினம் பந்தாடியது.

அண்மையில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்த லிவர்பூல், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் போர்ன்மத் குழுவுக்கு எதிராகக் களமிறங்கியது.

லூயிஸ் டியாசும் ரோபர்ட்டோ ஃபெர்மினோவும் தலா இரண்டு கோல்களைப் போட்டனர். எலியட், அலெக்சாண்டர் ஆர்னல்ட், கர்வால்ஹோ, வேன் டைக் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். போர்ன்மத் ஒரு சொந்த கோல் போட்டது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் 9-0 எனும் கோல் கணக்கிலான வெற்றியே ஆகப் பெரிய வெற்றியாகும். இப்போட்டியில் இந்த கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்த நான்காவது குழு எனும் பெருமை லிவர்பூலைச் சேரும்,

மற்றோர் ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 4-2 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழத்தியது.

2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்த பேலஸ், சிட்டியின் எர்லிங் ஹாலண்டின் அசத்தலான ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தோல்வியின் பிடியில் சிக்கியது. ஹாலண்ட் மூன்று கோல்களைப் போட்டார்.

வரலாற்றில் இடம்பிடித்த மலேசிய பூப்பந்து வீரர்கள்

தோக்கியோ: உலக வெற்றியாளர் பூப்பந்துப் போட்டியில் இரட்டையர் பிரிவில் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை மலேசிய வீரர்களான ஏரன் சியாவும் சோ வூ யிக்கும் நேற்று கைப்பற்றினர்.

இப்போட்டி ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்றது. இந்தப் பட்டத்தை மலேசியா வென்றிருப்பது இதுவே முதல்முறை.

இறுதி ஆட்டத்தில் இந்தோனீசிய ஜோடியை 21-19, 21-14 எனும் நேர்செட்களில் மலேசிய வீரர்கள் தோற்கடித்தனர். தோல்வியைத் தழுவிய இந்தோனீசிய வீரர்கள் உலக வெற்றியாளர் பட்டத்தை மூன்று முறை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லா லீகா பயிற்சிக் கழகம் செல்லும் உள்ளூர் இந்தியச் சிறுவன்

ஸ்பானிய காற்பந்து லீக்கின் பயிற்சிக் கழகத்தில் பயிற்சி பெற உலகெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 சிறுவர்களில் சிங்கப்பூரின் 14 வயது டென்சேல் ஆரி திருமுருகனும் (படம்) ஒருவர்.

செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்விக் கழகத்தைச் சேர்ந்த மாணவரான டென்சேல் மட்ரிட்டில் 10 மாதங்களுக்கு நடைபெறும் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவார். தேசிய சேவைக்குச் செல்லும் வரை அந்தப் பயிற்சிக் கழகத்தில் தொடர்ந்து பயிற்சி பெற அவர் விரும்புகிறார்.