மலேசியாவின் விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்த இளையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் மீது சூப்பர்மேன் போல் படுத்துகொண்டு வாகனத்தை ஓட்டியதற்காக அவர் பிடிபட்டார்.
விரைவுச்சாலையில் ஒரு ஓரத்தில் மோட்டார் சைக்கிள் மீது உல்லாசமாக சாய்ந்துகொண்டு வாகனத்தை இளையர் ஓட்டும் காட்சி காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மலேசிய சமூக ஊடகத்தளங்களில் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகிறது.
21 வினாடி நீளமான காணொளியில் இளையர் ஒரு ஹொண்டா இஎக்ஸ்5 ரக மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய அவர் தன்னை அதிகாரிகள் பின்தொடர்வதைகூட கவனிக்கவில்லை. அதிகாரிகள் தன்னை துரத்துவதை உணரும்போதுதான் அவர் எழுந்து அந்த மோட்டார் சைக்கிளில் முறையாக அமர்கிறார். வாகனத்தின் வேக அளவை கூட்டி, அங்கிருந்து அவர் தப்பிக்க முயன்றார். சிறிது தூரத்தில் அதிகாரிகள் அவரை பிடித்தனர்.
ஒரு வேளை வெகுநேரம் உட்கார்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டியதால் இளையருக்கு முதுகில் வலி ஏற்பட்டிருக்கும். அதனால் படுத்துகொண்டு வாகனத்தை ஓட்டியிருக்கக்கூடும் என்று இச்சம்பவம் குறித்து ஒருசிலர் வேடிப்பாகக் கருத்துரைத்தனர்.

