இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில்
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சார்ஷடா பகுதிக்கு நேற்று சென்றிருந்த அவர், "என் வாழ்நாளில் இதுபோன்ற மோசமான வெள்ளத்தைப் பார்த்ததில்லை. நாட்டின் நாலாபுறமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது," என்றார்.
அந்நாட்டின் பருவநிலை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான், "பாகிஸ்தான், பருவநிலை மாற்றத்தின் பேரழிவைச் சந்தித்து வருகிறது," என்றார்.
வெள்ளத்தால் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மக்கள், அதாவது ஏழு பேரில் ஒருவர், பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், 50,000 வெள்ளி மதிப்பிலான உணவு, அவசரகால தங்குமிடம், தண்ணீர், சுகாதாரப் பொருள்களை வழங்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிஉள்ளன.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழைக்கு மாண்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. மில்லியன்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மக்கள் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். சாலைகள், பாலங்கள் சேதமடைந்ததால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

