கடும் வெயில் சுட்டெரித்த சீன நகரங்களில் வெள்ள அபாயம்
பெய்ஜிங்: சில மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்த சீன நகரங்களில் இனி மழை கொட்டித் தீர்க்கவுள்ளதாகவும் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சோங்கிங், சிச்சுவான் மாநிலத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனத்த மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் வெள்ளத் தடுப்புக்கான அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதே பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் வறட்சி காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக இருந்தது. குறிப்பாக, சோங்கிங் பகுதியில் மின்சார பங்கீடு நடப்பில் இருந்தது.
கொவிட்-19: மிகப்பெரிய சீன மின்னணுவியல் சந்தை மூடல்
ஷென்சென்: உலகின் மிகப்பெரிய மின்னணுவியல் பொருள்கள் சந்தையாக விளங்கும் ஹுகுயின்பெய் பகுதி மூடப்பட்டுள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பகுதி செப்டம்பர் 2ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என சீன அதிகாரிகள் கூறினர்.
அத்துடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள 24 சுரங்க ரயில் பாதைகளும் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 18 மில்லியன் பேர் வசிக்க, வேலை செய்யக்கூடிய அப்பகுதியில், 9 பேருக்கு அறிகுறிகளுடன் கூடிய கிருமித்தொற்றும் 2 பேருக்கு அறிகுறிகளற்ற கிருமித்தொற்றும் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும் பெய்ஜிங் நகரில் கடுமையான முடக்கநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று சீனாவில்
1,556 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இது 3,000ஆக இருந்தது.
சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் நாசாவின் திட்டம் ஒத்திவைப்பு
ஃபுளோரிடா: சந்திரனுக்கு ஆளில்லா ராக்கெட் அனுப்பும் நாசாவின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆர்ட்டெமிஸ் என்ற ராக்கெட்டை, நேற்று சந்திரனுக்கு அனுப்ப நாசா திட்டமிடப்பட்டிருந்தது. ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அந்த ராக்கெட்டை அனுப்பவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. ஆனால், அதன் நான்கு முக்கிய இயந்திரங்களில் ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் திட்டமிட்டபடி ராக்கெட்டை ஏவமுடியவில்லை.
ராக்கெட்டை ஏவுவதற்கான வெப்பநிலையை அடையமுடியவில்லை என்று கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் சொன்னார். பொறியாளர்கள் இயந்திர கோளாற்றைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி மீண்டும் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

