லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கான தேர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், சகப் போட்டியாளரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கைவிட 47 வயது லிஸ் டிரஸ் தொடர்ந்து பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறார்.
கிட்டத்தட்ட 200,000 கட்சி உறுப்பினர்கள் தங்களின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதற்கான தபால், இணைய வாக்குப் பதிவு வரும் 2ஆம் தேதி முடிவடைகிறது.
அதன் பிறகு திங்கட்கிழமை வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரிட்டிஷ் பிரதமராகவும் பொறுப்பேற்பார்.
கிருமிப் பரவல் கட்டுப்பாடு நடப்பில் இருந்தபோது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது, குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரை அமைச்சராக நியமித்தது என பல்வேறு குறைகூறல்களுக்கு ஆளானார் தற்போதைய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இந்நிலையில், ரிஷி சுனக் உள்ளிட்ட தமது சொந்த கட்சியைச் சேர்ந்த சிலர் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால், ஜான்சனும் பதவி விலக நேரிட்டது.
இதையடுத்து, பல கட்ட வாக்கெடுப்புகளுக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் அந்த நாட்டின் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக்கும் லிஸ் டிரசும் இறுதிப் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.
முதலில் முன்னிலையில் இருந்த சுனக், கடந்த சில கருத்துக் கணிப்புகளில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். லிஸ் டிரஸ் கிட்டத்தட்ட 30 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லிஸ் டிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடைசி வரை ஜான்சனின் அமைச்சரவைக்கு ஆதரவாக இருந்ததும் பிரெக்சிட்டிற்குப் பிறகு பல முக்கிய திறந்த வர்த்தக கொள்கைகளுக்குக் காரணமாக இருந்ததும் கட்சி உறுப்பினர்களிடையே டிரஸ்சிற்கு நற்பெயரையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வரிக் குறைப்பை மையப்படுத்திய தேர்தல் பிரசாரம், அவருக்கான ஆதரவை வலுப்படுத்தியது.
ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சுனக் பதவி விலகியது, கட்சி உறுப்பினர்களுக்கு அவர்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. அத்துடன் பகட்டு ஆடைகள், ஆடம்பர வீடு என செல்வந்தராக வலம் வரும் சுனக், சாதாரண மக்களின் வாழ்க்கையை புரிந்துகொள்வாரா என்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

