கோலாலம்பூர்: மலேசியாவில் பெரிக்கத்தான் நேஷனல் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிதி கூறினார்.
நம்பிக்கை மோசடி, பணமோசடி, 52.2 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட 47 குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின்போது உயர்நீதிமன்றத்தில் அவர் இவ்வாறு சொன்னார்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தவுடன் அதன் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அதே சமயத்தில் தோல்வியடைந்த பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டதாக ஸாஹிட் நீதிமன்றத்தில் சொன்னதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோவின் அகமது மஸ்லான் உள்ளிட்ட 18 பேர்மீது குற்றம்சாட்டப்பட்டதாக ஸாஹிட் சொன்னார்.
டிஏபி கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உள்ளிட்ட பக்கத்தான் கூட்டணியின் 15 பேர் மீதான குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக மலாய் மெயில் செய்தி கூறுகிறது. மேலும் அம்னோவின் மற்ற பிரிவு தலைவர்கள் 81 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

